பித்அத்கள்

மீலாதுந்நபி கொண்டாடலாமா?

بسم الله الرحمن الرحيم

மீலாதுந்நபி கொண்டாடலாமா?

இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவி விட்ட பித்அத்களில் ஒன்று தான் நபியவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதாகும். இது குறிப்பாக ரபியுல் அவ்வல் மாதம் கொண்டாடப்படுகிறது இப்படி கொண்டாடுவது முஸ்லிம்களிடம் நன்மையாக கருதப்படுகிறது இது கூடாது என்பதற்காக விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

இந்த மார்க்கத்தில் அடிப்படையான ஆதரங்களாக இருப்பது குர்ஆனும் ஹதீசுமாகும்.அல்லாஹ் தனது வேதத்திலும், தூதருடைய வழிமுறையிலும் எதை மார்க்கமாக ஆக்கினானோ அதையே வணக்கமாக செயல்படுத்தவேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வும், அவனது தூதரும் எதை மார்க்கமாக ஆக்கினார்களோ அதன் மூலமே அல்லாஹ்வை நெருங்கமுடியும். ஒருவர் தான் செய்யும் அமல்கள் தனது அறிவுக்கோ அல்லது மற்றவரின் அறிவுக்கோ பொருத்தமானதாக இருக்கிறது என்று கருதி அல்லது பெரிய அறிஞரின்; சொல், எனவே அவரை கண்ணியப்படுத்த வேண்டும் அவரது கருத்தை ஏற்கவேண்டும் என்றோ எண்ணி அவற்றை எடுத்து செயல் படுத்தினால் அது பித்அத்தாகும் எனவே அது எவ்வளவு பெரிய நல்ல காரியம் என கருதினாலும் ரத்து செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

நல்லதை நாடி செய்யக்கூடிய எத்தனையோ நபர்கள் அதை அடைந்து கொள்ளவில்லை என இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் ஒரு கூட்டத்தரை பார்த்து கூறினார்கள், அந்த கூட்டத்தார்கள் கற்களை கொண்டு சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் அக்பர் என எண்ணி கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்த்து இப்படி செய்யாதீர்கள் எனக்கூறினார்கள் அதற்கவர்கள் நாங்கள் நல்லதை தான் நாடுகிறோம் என கூறினார்கள்.(தாராமி)

மார்க்க விசயங்களில் ஏதாவது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அப்பொழுது அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன கூறியுள்ளார்கள் என்பதன் பால் திரும்பி விடவேண்டும். அவ்வாறு திரும்ப வில்லையெனில் அது அல்லாஹ்வின் பக்கம் அவர்களை நெருக்கி வைக்காது.

அல்லாஹ் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللَّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً (النساء-59)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப் பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத் துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (الحشر-7)

மேலும்(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்குர்ஆன் 59:7)

யார் நம்மால் ஏவப்படாத புதிய காரியங்களை மார்க்கத்தில் ஏற்படுத்துகிறார்களோ அது மறுக்கப்படவேண்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி

மீலாதுந்நபி பற்றி சட்டங்கள்

பிந்திய காலத்தில் வந்த சில அறிஞர்கள் இதை நல்லதாக காட்டினார்கள், இதை செய்வதை குற்றமாக கருதவில்லை இந்நிலையில் இது நமக்கு மத்தியில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது, இப்படி கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் நாம் அல்லாஹ் அவனின் தூதரின் பக்கம் செல்லவேண்டும் அப்படி பார்க்கின்ற பொழுது அதில் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை மேலும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கின்றபொழுது அவர்களுடைய பிறந்த தினத்திற்காக எந்தவித விழாவையும் நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் ஏவவில்லை இன்னும் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த நல்லற தோழர்களாவது இதை செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. நபி(ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள், ஸஹாபாக்கள் நபி அவர்களோடு தோழமை கொண்டார்கள் இன்னும் அவர்களை ஈமான் கொண்டார்கள் அவர்களின் மீது அளவில்லாத அன்பு கொண்டார்கள் இன்னும் அவர்களை கண்ணியப்படுத்தினார்கள் இன்னும் அல்லாஹ் அவனது தூதருக்காக தங்களது உயிர்களை கொடுத்தார்கள் இன்னும் சிறிய விசயங்களிலிருந்து பெரிய விசயங்கள் வரை அனைத்திலும் அவர்களை பின்பற்றி வாழ்ந்தார்கள் அவர்களுடைய சுன்னாவை ஒன்றுவிடாமல் பிறருக்கு எடுத்துச் சொன்னார்கள் எந்த அளவிற்கெனில் தொழுகையின் ஆரம் பத்தில் அவர்கள் அமைதியாக ஓதிய பொழுது அசைந்த தாடியின் அசைவை கூட எடுத்து கூறியுள்ளார்கள். இப்படி வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களோடு தாங்கள் வாழ்ந்த அந்த வாழ்நாளில் மீலாது கொண்டாடியாதாக பார்க்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பின் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் இன்னும் அவர்களை அன்பு கொண்டவர்களாக இருந்தவர்கள் ஸஹாபா பெருமக்களாவார்கள், அவர்களில் அபூபக்கர் (ரலி) அவர்களோ, உமர்(ரலி)அவர்களோ, உதுமான் (ரலி) அவர்களோ, அலி (ரலி) அவர்களோ இன்னும் ஏனைய ஸஹாபா பெருமக்களோ அல்லது தாபியீன்களோ யாருமே மீலாதை கொண்டாடவில்லை. மேலும் சிறந்த சமுதாயமாக நபியவர்கள் கூறிய மூன்று நூற்றாண்டை சார்ந்த யாருமே மீலாது கொண்டாடவில்லை.

எனவே அவர்களுக்கு மார்க்கமாக ஆக்கப்படாத எதையுமே அவர்கள் செய்ததில்லை அப்படி செய்வதன் மூலம் அல்லாஹ் அவனது தூதரின் வெறுப்பைத்தான் பெறமுடியும் என்று விளங்கியிருந்தார்கள் அது மட்டுமல்ல அல்லாஹ் அவனது தூதரின் வழியில் காட்டப்படாத அத்துனை மார்க்க விசயங்களுமே பித்அத் எனக் கருதினார்கள் எனவே நபியவர்களும், அவர்களை தங்களது உயிரினும் மேலாக நேசித்த நல்லறத்தோழர்களும் செய்து காட்டாத புதுமையான வழிமுறையே மீலாது கொண்டாட்டம் ஆகும்.

இந்த மீலாது விழா நான்காம் நூற்றாண்டில் தோன்றியது குறிப்பாக ஃபாதி மிய்யாக்கள் என்று சொல்லப்படக்கூடிய அந்த கூட்டத்தாரால் ஏற்படுத்தப்பட்டதாகும் இவர்களிலுள்ள அறிஞர்கள் இந்த வழிகேட்டை தோற்றுவித்தார்கள் மேலும் பித்அத் மற்றும் வெறுக்கப்பட்ட பல விசயங்களை உருவாக்கினார்கள் எனவே அவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ தகுதியில்லாதவர்களாவார்கள்.

மேலும் அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வின் தூதரோடு முற்று பெற்று விட்டது அல்லாஹ் கூறுகிறான்: இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் பூரணமாக்கி வைத்து விட்டேன் என்னுடைய அருட் கொடைகளை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்5:3)

மார்க்கம் முழுமையாகி விட்டது இதற்கு பிறகு மார்க்கத்தில் யார் அதிகப்படுத்துகிறாரோ அவர் மார்க்கத்தை முழுமை படுத்துகிறார் என்று ஆகிவிடும் மேலும் குர்ஆனிற்கு முரண்பட்டவராக ஆகிவிடுகிறார் அல்லாஹ்வை விட அறிந்தவராக தன்னை பிரகடனப்படுத்தியவராக ஆகிவிடுகிறார், அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

நபியவர்கள் இறுதி தூதராகவும், நபிமார்களில் சிறந்தவராகவும், தங்களது உம்மத்திற்கு சிறந்த உபதேசம் செய்தவராகவும், மார்க்கத்தை தெளிவு படுத்தியவராகவும் தெளிவான பேச்சுடையவர்களாகவும் இருந்துள்ளார்கள். பிறந்த நாள் கொண்டாடுவது நன்மையான காரியமாகவும், அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தையும் ஏற்படத் தரக்கூடியதாக இருந்திருந்தால் தாங்களும் செயல் படுத்திக் காட்டி நம்மவர்களையும் செயல் படுத்தும்படி கூறியிருப்பார்கள் எனவே முற்றிலும் வழிகேடு பித்அத் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவோம்.

மீலாது கொண்டாடுவோர் அவர்களின் பிறந்த தினம் குறித்து தேதி குறிப்பிடப்படாமல் இருக்கின்ற பொழுது எப்படி அவர்களுக்கு பிறந்த தினம் கொண்டாட முடியும்.

அவர்களின் பிறந்த தினத்தை குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்கள் சிலர் ரமலான் என்றும், சிலர் ரபியுல் அவ்வல் 8 என்றும், சிலர் ரபியுல் அவ்வல் 12 என்றும் இப்படியே பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது இதில் எதில் கொண்டாட போகிறார்கள் அல்லது அவர்களின் பிறந்த தினத்தை பார்த்து ஊர்ஜிதம் செய்தவர்கள் உண்டா?

இத்தனை தடுமாற்றங்கள் உள்ள ஒரு விசயம் மார்க்கமாக ஆக்கப்பட்டிருக்க முடியுமா? மார்க்கமாக இருந்திருந்தால் அது சரியான முறையில் காட்டப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று பட்டு செய்திருப்பார்கள் எனவே இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்வோம்.

நபியவர்களின் இறப்பு ரபியுல் அவ்வல் மாதத்தில் இருக்கிறது. பிறப்பும், இறப்பும் ஒன்றாக இருக்கும்பொழுது இறப்பை விட்டு விட்டு பிறப்பை கொண்டாடுவது சாத்தியமற்றதாகும் எனவே இது நபியவர்களால் காட்டப்படாத வழிமுறையாகும்.

மீலாது விழா கூடாது என்பது தெளிவாகிறது என்றாலும் சைத்தான் அழகு படுத்தி காட்டியதின் காரணமாக மார்க்கத்தில் இந்த வழிமுறைகள் உண்டாகியுள்ளது, இந்த வழிமுறைகளை அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டவில்லை மாற்றார்களிடமிருந்து அடித்த காப்பியாகும், எனவே இது போன்ற கொண்டாட்டங்களிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். மேலும் நபியவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் ஏற்படுத்தியுள்ள மவ்லூதுகள் அன்றைய தினம் ஏற்படுத்தியுள்ள விசேச நிகழ்ச்சிகள் யாவும் அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை புரிந்து எந்த வகையிலும் அதற்கு துணை போகமல் இருப்பதே நமது ஈமானை பாதுகாக்க முடியும் எனவே சிந்தியுங்கள் அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தரும் காரியங்களில் மட்டும் இணைவோம் அவனது வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகி வாழ்வோம்.