சூரா யாஸீன் விளக்கம்
சூரா யாஸீன் 83 வசனங்களை கொண்டது. இதில் மூன்று வகையான செய்திகள் கூறப்படுகின்றது.ஒன்று மரணத்திற்கு பின்பு உயிர்பித்தலை ஈமான் கொள்ளுதல் இரண்டாவது ஒரு கிராமவாசிகளின் வரலாற்று செய்திகள் மூன்றாவது இறைவனின் ஏகத்துவத்தை பிரதிபலிக்கும் செய்திகள்.
இந்த அத்தியாயத்தின் வசனம் ஆரம்பிக்கப்படும் போதே இறைவன் குர்ஆன் மீது சத்தியமிட்டு நபியே! நீர் இறைத்தூதர்களில் ஒருவர்தான் என்று கூறுகின்றான். ஏன் இந்த செய்தியை ஆரம்பமாக கூறுகின்றான் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பட்டபோது குறிகாரர், சூனியம் செய்பவர் ,பைத்தியக்காரர், என்றும் உன்னை தவிர வேறு நபரை நபியாக அனுப்புவதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இப்படி பல்வேறு விமர்சனங்களை மக்கள் முன் வைக்கின்றபோது இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இறைவன் இப்படி வசனத்தை ஆரம்பிக்கின்றான்.
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.நேரான பாதை மீது (இருக்கின்றீர்). அல்குர்ஆன் 36 : 2-4
அடுத்த வசனமாக நபியின் முன் வைக்கப்பட்ட விமர்சனம் நீர் அழைக்கும் கொள்கை தவறானது நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இருக்கின்ற மார்க்கமே சிறந்தது என்று கூறியதற்கு இறைவனின் பதிலடியாகும். உங்களில் மரணித்தவர்களையும் அவர்கள் முற்படுத்தியதையும், விட்டு சென்றதையும் விளக்கமான ஏட்டில் நாம் பதிந்தே வைத்துள்ளோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வுலகில் மனிதன் செய்யும் சிறிய மற்றும் பெரிய விசயங்களும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன. பனிரெண்டாம் வசனம் இறங்குவதற்கு இந்த சம்பவமும் ஓர் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அதுஉண்மையா) என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் ஆம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்;
உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும் என்று (இரு முறை) கூறினார்கள். நூல் : முஸ்லிம்
பதி மூன்றாம் வசனத்தில் ஓர் கிராமத்ததையும் இந்த கிராமத்திற்கு அனுப்பட்ட மூன்று இறைதூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கின்ற போது அதை நிராகரித்து விடுகின்றர். அந்த ஓரை சார்ந்த ஓர் ஏழை மனிதர் இந்த இறைத்தூதார்கள் கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறியும் அந்த மனிதரை அடித்து கொலை செய்து விட்டனர். ஆனால் அல்லாஹ் அவருக்கு உயரிய சுவனத்தை கொடுத்த அதில் நுழைந்து விடு என்று கூறுகின்றான். இறந்த பிறகும் என் சமூகம் என் இறைவன் வழங்கிய சிறப்புகளை அறிந்துக் கொள்ள வேண்டுமே என்று தன் கவலையை வெளிப்படுத்துகின்றார். எனவே அழைப்பு செய்பவர்களுக்கு இதில் பல்வேறு படிப்பினைகள் உள்ளது. ஐம்பத்தி ஒன்றாம் வசனத்தில் சூர் ஊதபட்ட உடன் அனைவரும் தங்கள் சமாதிகளிலிருந்து எழுந்திருத்து எங்களை எழுப்பியவர்கள் யார்? என்று கேட்பார்கள் . ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். அல்குர்ஆன் 39 : 68
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். நூல் : புகாரி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்) மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்காளகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம் எனும் (திருக்குர்ஆன் 21:104 வது இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு அறிந்துகொள்ளுங்கள்; மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். நூல் : புகாரி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்றுதிரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும் இரவில் ஓய்வெடுக்கும் போதும் காலை நேரத்தை அடையும்போதும் மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும். நூல் : புகாரி
இந்த சூராவை இறந்தவர்களுக்கு தான் ஓத வேண்டும் என்று பலர் நினைத்து ஓதுவதை பார்க்கின்றோம் தவறுதலான புரிதலே இதற்கு காரணமாகும். (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. அல்குர்ஆன் 36 : 70
ஆதாரமற்ற சூரத்துல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்
யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது. இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
திருக்குர் ஆனின் இதயம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான். நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)
இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்.
திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்
சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் ”அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்” என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது. இப்படியே யாஸீன் சூரா சம்பந்தபடுத்தி வரும் பல செய்திகள் ஆதாரமற்றதாகவே உள்ளது.
எனவே இந்த அத்தியாயத்தை படித்து அதில் உள்ள படிப்பினைகள உணர்ந்து செயல்படுவோம்..