எச்சரிக்கைகள்

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

بسم الله الرحمن الرحيم

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

உலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?’ என்று கேட்க மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையப் போவதைப் பார்க்கிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. ஆகவே உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். அல்குர்ஆன் 64 :15 – 16

மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காக, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கடும் சிரமங்கள் எடுத்து கடல் கடந்து, நாடு கடந்து, மொழி தெரியாத இடமாக இருந்தாலும் அதையும் சமாளித்து ஒடி உழைக்கின்றான் காரணம் பொருளை தேட வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஆனால் அந்த செல்வத்தை தேடுவதிலும் அதை செலவு செய்வதிலும் மார்க்கத்தை மறந்து ஃபித்னாவில் வீழ்ந்து விடுகின்றான்.

எனவே தான் முன் சென்றவர்கள் எப்படி செல்வத்தால் அழிந்து போனார்கள் என்பதை குர்ஆன் நமக்கு சுற்றி காட்டுகின்றது.

நிச்சயமாக காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ் நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28 :76

ஆகவே நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. அல்குர்ஆன் 28 :81

வாழ்வில் சிரமம் இல்லாமல் அனைத்தும் கிடைத்து கொண்டே இருந்தால் இறைவனை வணங்குவோம் இல்லையெனில் இறைவனை புறக்கணித்து வாழ்வோம் என்று எண்ணும் மனிதர்களும் உள்ளனர்.சிலரின் வணக்கமே விளிம்பில் நின்று வணங்குவது தான். துன்பங்கள் ஏற்பட்டால் ஒடி ஒளிந்து கொள்வார்கள்.

இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும். அல்குர்ஆன் 22 :11

இறைவன் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி மறந்து நடந்தால் அந்த அருட்கொடைகள் மனிதர்களிடமிருந்து பறிக்கபட்டுவிடும்.

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம் இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும் சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். அல்குர்ஆன் 34 :15 – 16

எந்த கால கட்டத்தில் வாழ்ந்தாலும் எந்த மாதிரியான ஃபித்னாகள் நடந்தாலும் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் ரசூலுக்கும் கட்டுபட வேண்டும்

உங்களிடம் அல்லாஹ்வின் வார்த்தைக்கு செவிமடுப்பதையும் கட்டுபடுவதையும் உபதேசம் செய்கின்றேன் உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக்கபட்டாலும் சரியே! எனக்கு பின்னால் மிகப்பெரும் குழப்பத்தை பார்ப்பீர்கள் எனவே எனது வழிமுறையும் தங்களின் கடவாய் பற்களை கொண்டு கடித்து (மார்கத்தை பாதுகாத்த) நேர்வழி பெற்ற என் தோழர்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள் மார்கத்தில் இல்லாத புதியவைகளை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்.ஒவ்வொரு புதிய விசயங்களும் வழிகேடே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்? என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு சோதனைகள் துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன். உமர்(ரலி) ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர்! அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவவை அதற்கான பரிகாரமாகும்’ என்று நான் பதில் கூறினேன்.

‘நான் இதைக் கருதவில்லை; கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பத்)தைப் பற்றியே கேட்கிறேன்’ என்றார்கள். நான் ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும் ‘அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘உடைக்கப்படும்’ என்றேன். ‘அது உடைக்கப்பட்டால் மூடப்படவே மாட்டாது தானே?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். கதவு எதுவென? ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்’ என்றார். மேலும் அவரிடமே ‘நீங்கள் குறிப்பிடுவதை உமர்(ரலி) அறிவாரா?’ எனக் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார். ஏனெனில் பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்’ என்றும் ஹுதைஃபா(ரலி) கூறினார். நூல் : புகாரி

ஃபித்னா உடைய காலத்தில் வாய் திறப்பதை விட வாய் மூடி மவுனமாக இருப்பதே மிகச் சிறந்தது.

நான் ( என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம் மக்களின் ( அரசியல் ) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கின்றது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்த பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலை அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?) என்று கேட்டேன் அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு) போய் சேர். ஏனெனில் அவர்கள் உன்னை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். என்று கூறினார்கள் . நான் செல்லும் வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன் அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்த போது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு) எவர் இந்த ( ஆட்சி பொறுப்பு ) விசயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகின்றாரோ அவர் தன் தலையை காட்டட்டும். ஏனெனில் அவரை விடவும் அவருடைய தந்தையை விடவும் நாமே ஆட்சி பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர் என்று கூறினார்கள்.

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு) க் கொண்டு (உஹத் மற்றும் கன்தக் போர்களில் முஆவிவே) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூ ஸூப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற) வரே இந்த (ஆட்சியதிகார) விசயத்திற்காக உங்களை விடக் தகுதி வாய்ந்தவர் என்று சொல்ல நினைத்தேன். ஆயினும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இரத்தம் சிந்த செய்து விடும் ஒரு வார்த்தையை நான் கூறி விடுவேனா நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கபட்டு விடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும் சுவனத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தாயரித்து வைத்துள்ளவற்றை எண்ணிப்பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை) என்று கூறினார்கள். அப்போது நான் (நல்ல வேளை நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறினேன். நூல் : புகாரி

ஃபித்னாவை அறிந்து அதில் வீழ்ந்து விடாமல் மார்க்கத்தின் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மறுமையில் வெற்றி பெற்றவர்களாக ஆகுவோம்.